கடந்த வார இறுதியில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற குடியேற்ற கைது நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கும் (ICE) எதிராக வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர 4,000 தேசிய காவல் படை வீரர்களை அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார். இது, அவரின் சட்ட விரோத குடியேறிகளை நாடு கடத்தும் பெரும் அளவிலான திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை அகற்றுவதிலும், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதிலும் வேகம் காட்ட விரும்பிய டிரம்ப் நிர்வாகத்துக்கு இது பொது மக்கள் முன்னிலையில் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

"வீரர்களை அனுப்புவது என்பது ஒரு சர்வாதிகார அதிபரின் குழப்பமான கற்பனை" என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், டிரம்பின் முக்கிய விமர்சகருமான ஆளுநர் கவின் நியூசம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலிஸில் நடக்கும் சோதனைகள், கைது மற்றும் நாடு கடத்தல் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.